புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, December 11, 2008

மரம் போல்வர்?



கிராமத்தில் வாழ்ந்த நாட்களில் மரங்களுடன் நெருக்கமான உறவு இருந்தது. மனித உணர்வுகளுக்கு ஏற்றவாறு மரங்கள் நிலை மாறுவதாக அறிவியல் சொல்கிறது. என் கண்ணீர்ப் பொழுதுகளில் வாடிப்போன, பட்டுப்போன மரங்களைப் பார்த்தபொழுது இதை உண்மை என்றே நான் ஏற்றுக்கொண்டேன். சந்தோஷமான் நேரங்களில் மரங்கள் மனதிற்குள் வருவதில்லை; எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு இதமாக சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றன.

நினைவுப் பாதைகளில் திரும்பி நடக்கின்றபோது அங்கங்கே இளைப்பாற பல மரங்கள் நின்றுகொண்டிருக்கின்றன, உயரமாக, குட்டையாக, தரையை மூடிய படி, நிழலினூடே சிறு கற்றையாக ஒளியை அனுப்பியபடி, கரையான்களால் அரிக்கப்பட்டு, கிளைகள் வெட்டுப்பட்டு, அங்கங்கே காதலிகள் பெயர்கள் செதுக்கப்பட்டு, இன்னும் நிறைய.

இரா வேளைகளில் தனிமையில் நடைபோடும்போது, அந்திமக்காலங்களில் ஏதேதோ கதைகள் சொல்லும் வயோதிகர் போல் என்னவோ பேசிக்கொண்டு உடன் வருகின்றன மரங்கள்; பகல் பொழுதுகளில் தன் நிழல் விழுந்த தடங்களை இரவுகளில் தன் அகன்ற கைகள் கொண்டு துழாவித் தேடுகின்றன.

நகரங்களில் வாழ்க்கையைத் தேடத் தொடங்கிய பிறகு மரங்களோடான இணக்கம் கொஞ்சம் குறைந்து தான் போனது. நல்ல வெயில் நேரங்களில் எப்போதாவது வீசும் தென்றல், சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள கிடைக்கும் நிழல் இவை மட்டுமே மரங்களின் இருப்பை நினைவுபடுத்துகின்றன.

அன்று வீட்டை விட்டு அலுவலகத்துக்குப் புறப்பட்ட போது தான் தோன்றியது, எத்தனை மரங்கள் நிறைந்த ஒரு தெருவில் நான் வசித்துக் கொண்டிருக்கிறேன் என்று. இதர சென்னை வாசிகளுக்குக் கிடைக்காத நன்மை எனக்குக் கிடைத்திருப்பதாகத் தோன்றியது. சரி! ஒரு சின்ன கணக்கெடுப்பு செய்து விடலாம் என்று முடிவு செய்து புறப்பட்டேன். சூளைமேடு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், மாம்பலம், தியாகராயநகர், பாண்டிபஜார் என்று 7 கிமீ நடந்து அலுவலகத்தை அடைந்த போது என் எண்ணம் முற்றிலுமாக மாறிப்போனது. சென்னையில் மரங்கள் இல்லை என்று யார் சொன்னது?

எத்தனை மரங்கள்! எத்தனை வகைகள்! உயரே பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தேன். தென்னை, பப்பாளி, வாழை, புளியமரம், இன்னும் எத்தனையோ! பெயர் தெரியாத பல மரங்களும் இருக்கின்றன.

பெரும்பாலான மரங்கள் மதில் சுவர்களுக்குள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. வேர்கள் சுவர்களைப் பொருட்படுத்துவதில்லை என்று அவர்கள் உணரவில்லை. பொது இடங்களில் இருந்த மரங்களும் பெரும்பாலும் நடை மேடைகளால் சூழப்பட்டிருக்கின்றன.

நான் பார்த்த மரங்கள் எதுவும் கடந்த 15 - 20 வருடங்களில் நடப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. நம் மனிதர்களின் மன நிலை எந்த அளவுக்கு மாறிப்போய் விட்டிருக்கிறது என்பது தெளிவாகப் புலப்பட்டது. நம் மூதாதையர் நிழலில்தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய சோகம்! குறைந்தது அவர்களுக்கு நன்றியையாவது சொல்லி வைப்போம். இனி வரும் தலைமுறை இந்த நன்றியை நமக்குச் சொல்லாது என்பது மட்டும் நிதர்சனம்.

பின்குறிப்பு : நான் பார்த்த மரங்களின் எண்ணிக்கை சில நூறுகள் இருக்கலாம். நேற்று என் பாதையில் வெட்டப்பட்ட ஒரு முருங்கை மரத்தை மட்டும் கணக்கில் இருந்து எடுத்துவிடுங்கள்.

7 comments:

Bee'morgan said...

short and sweet post.. மரங்களைப் பற்றிய அறிமுக வரிகள் ரொம்ப நல்லா இருக்கு.

மரங்களின் எண்ணிக்கையில் சென்னையை விட பெங்களுரு கொஞ்சம் தேவலாம் என நினைக்கிறேன்.
- - - - -
ஒரு வழியா நீங்கள் திரும்பவும் எழுதத் தொடங்கியதே மகிழ்ச்சி.. :) ஒரே ஒரு நேயர் விருப்பம்.. தொடர்ந்து எழுதவும்.. :)
- - - - -

J S Gnanasekar said...

தொடர்ந்து அஞ்சாறு புள்ளிகள் வைத்துவிட்டு, ஒரு கேள்விக்குறியையோ ஆச்சரியக்குறியையோ சம்பிரதாயத்துக்கு நிறுத்திவைத்து வரிக்கு வரி சிரிக்கவைக்கும் கவிதைகள் நிறைய படிக்கிறோம். நிறுத்தங்களில் அர்த்தங்களையே மாற்றும் வித்தை பலபேருக்குக் கைகூடுவதில்லை. தலைப்பில் ஒரு கேள்விக்குறியை வைத்து அசத்திவிட்டீர்கள். அருமை.

முந்தைய நண்பர் சொன்னதுபோல, தொடர்ந்து எழுதுங்கள்.

இந்தமுறை நீங்கள் மேற்கோள் எதுவும் காட்டவில்லை. பொருத்தமான மேற்கோள்:

http://hk.youtube.com/watch?v=YWeByufure0&feature=related

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தம்பி சேகர்,

உன் கருத்தைப் படித்தவுடன் நான் உணர்ச்சி வயப்பட்டது உண்மை. எந்த வரிகளை மனத்தில் கொண்டு நான் இந்தத் தலைப்பை வைத்தேனோ அதே வரிகளை நீ மேற்கோளாகக் காட்டியிருந்தது என்னைப் புல்லரிக்க வைத்தது (உண்மையாக :)).

தம்பி பாலா,
கருத்துக்கு நன்றி! தொடர்ந்து எழுதும் எண்ணம் உள்ளது. அதற்கான முயற்சியில் கண்டிப்பாக ஈடுபடுவேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Anonymous said...

சேரா
இதை படிக்கும் பொழுது மரங்களுடன் தனியாக அதன் அழகை ரசிப்பது போல ஒரு உணர்வு.............................
பாராட்ட வார்த்தைகளே இல்லை..............................
தியாகராய நகரில், துரைசாமி சுப்வே அருகில் உள்ள ஒரு தெருவில் ஒரு வித்யாசமான மரம் ஒன்று இருக்கிறது. ஏனோ அதை பார்த்தல் ஒரு சந்தோஷம் மொத்த குடும்பத்தினரையும் ஒன்றாக பார்ப்பது போல் ஒரு உணர்வு. அந்த வழியாக செல்லும்போது அதை பார்த்தல் ஒரு சந்தோஷம், பார்க்காமல் வந்தால் எதையோ பரிகொடுதற்போல் ஒரு உணர்வு. அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை அந்த தெருவின் பெயரை பார்த்து சொல்கிறேன் அந்த வழியாக செல்லும்போது பாருங்கள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பாலா!

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

'எனது கல்லூரி நண்பர்களுக்குக் கூட இந்த விஷயம் தெரியுமா என்று தெரியவில்லை. விடுதியில் இருந்து கல்லூரி செல்லும் பாதையில் உள்ள நீண்ட, தடிமனான, கரும் பச்சை இலைகளை உடைய அந்தப் பெயர் தெரியாத மரம் என் தோழி'.

'நானும் என் நண்பனும் ஒவ்வொரு முறைக் கடக்கும் போதும் கரவொலிக்கும் அந்தப் பூவரச மர இலைகளைக் கண்டுப் பூரித்திருக்கிறோம்'.

இவை போன்ற நீங்காதப் பல நினைவுகளை மீண்டும் அசை போடச்செய்தது உங்கள் பதிப்பு. எஸ்.ரா-வின் ஒரு துணையெழுத்து அத்தியாயத்தைப் படித்த ஒரு உணர்வு. நன்றிகள் கோடி!

மரங்கள் ஒற்றைக் கால் கொண்டு நிற்பது கண்டும் கூட மனிதன் மனமிரங்க மறுக்கிறான். வெட்டிச் சாய்க்கிறான். மனிதன், மர 'வெட்டி'யான்!

bhupesh said...

நான் மீண்டும் மீண்டும் படிக்கும் பக்கம் இது. இப்படியும் ஒரு போதை!!!