புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, May 28, 2009

இலக்கியக்கூடல் - இரண்டாவது அத்தியாயம்

'யுகமாயினி' இலக்கிய மாத இதழின் ஆசிரியர் திரு.சித்தன் அவர்களின் முயற்சியில் நடைபெறுகிறது இலக்கியக்கூடலின் இரண்டாவது அத்தியாயம். இம்முறை, அயல்நாடுகளில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சிலரும், Video conferencing முறையில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக திரு.சித்தன் சொன்னார். நிகழ்வில் கலந்துகொள்ள திரு.சித்தன் சார்பாக அனைவரையும் அழைக்கிறேன். நன்றி!

இடம் : ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம், மயிலாப்பூர்
நாள் : ஜுன் 14

http://yugamayini.blogspot.com/

தீ

தொடாதே சுடும்
என்றார்கள்

நானும் கடைசி வரை
தொட்டுப் பார்க்கவேயில்லை

இதுதான்
சுடுவதென்றால்
என்னவென்றே
எனக்குத்
தெரியாமல் போன கதை

Wednesday, May 27, 2009

துணி

கருப்பு
சிவப்பு
வெள்ளை
நீலம்
மஞ்சள்
பச்சை
என்று
வண்ணங்கள் கலந்தடித்துப்
பளபளக்கின்றன
கொடிகள்

என் வீட்டுக் கொடியில்
காய்கிறது
தாத்தாவின்
கிழிந்த கோவணம்

Monday, May 25, 2009

பிறந்த நாள்

குப்புறப் படுக்க வைத்து
கவிதை நூல்களை மேலேற்றி
அழகு பார்க்கிறார்கள் நண்பர்கள்

காலை வாகன வீச்சுகளில்
தப்பித்து
கவிதையாய் வந்து வாழ்த்திப்
போகிறாள் தோழி

ஏதோ சந்துகளில்
நடந்துகொண்டு
எவனையோ பார்த்தவுடன்
என் நினைவு வந்தவனாய்
அலை பேசியில் அழைக்கிறான்
நண்பன்

கடந்த காலப்
பற்று வரவு கணக்குகள்
தீர்க்கக் கடமைக்காய்
வாழ்த்துகிறார்கள் சிலர்

முடிவில்லாத வெற்றுப்பரப்பின்
இறுதியைத் தேடிய பயணத்தில்
இன்னொரு நாளாய்க்
கடந்து போனது
இன்னொரு பிறந்த நாள்

Saturday, May 23, 2009

புதையல்

புதையல் தேடிய கணங்களில்
இருந்தது புதையல்

கண்டெடுத்த பின்
தொலைந்து போனது

தொலைத்த பின்
மீண்டும் கிடைக்கலாம்

Thursday, May 21, 2009

தப்பிப் பிழைத்தவர்கள்

பசித்திருக்கிறார்கள்

தனித்திருக்கிறார்கள்

விழித்திருக்கிறார்கள்

நான்
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

Wednesday, May 20, 2009

சுத்தம் செய்பவன்

எல்லாக் கறைகளையும்
கழுவித் துடைக்கிறது
தண்ணீர்

தண்ணீர்
செய்யும் கறையை
எது கொண்டு
கழுவுவேன்?

Sunday, May 17, 2009

யாரோ ஒருத்தி

இக்கவிதை 26/08/2009 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் பிரசுரமானது

என்முகம் பார்த்தபடியே
பயணித்தாள்

புருவம் உயர்த்தி
ஆச்சர்யம் காட்டினாள்

முகம் தாழ்த்திக்
கொஞ்சமாய்ச் சிணுங்கினாள்

உதடு வலிக்காமல்
ஏதேதோ முணுமுணுத்தாள்

ஏதோ யோசித்துத்
திடீரெனச் சிரித்தாள்

நிறுத்தம் வந்ததும்
இறங்கிப்போனாள்
அலைபேசிக்குத்
தலையைச் சாய்த்தபடி.

Friday, May 15, 2009

நட்பு

தயக்கத்துடன் சொல்லி,
வெட்கத்துடன் கேட்டுக்கொள்கிறது
காதல்

சாதாரணமாகச் சொல்லி,
சாதாரணமாகவே கேட்டுப்
புன்னகைக்கிறது
நட்பு

'இன்று நீ
அழகாய் இருக்கிறாய்'
என்ற வார்த்தைகளை

Thursday, May 14, 2009

எல்லா ஊர்களிலும் ஒரு கதை

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)

ஆணும் பெண்ணும்
காதலித்தார்கள்

காதலனும் காதலியும்
கட்டிக்கொண்டார்கள்

கணவனுக்கும் மனைவிக்கும்
ஒரு குழந்தை பிறந்தது

இப்பொழுது
குழந்தையின்
தந்தையும் தாயும்
ஒன்றாக வசிக்கிறார்கள்

Monday, May 11, 2009

இலக்கியக்கூடல்

இலக்கியக் கூட்டங்கள் எனக்கு மிகப் புதியவை. நண்பர்கள் பிரவின்ஸ்கா, மற்றும் கோகுல கிருஷ்ணன் இவர்கள் தான் அழைப்பு விடுத்தார்கள். 'யுகமாயினி' இதழின் ஆசிரியர் சித்தன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கியக் கூடல் அது. மைலாப்பூர் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் நடைபெறும் என்றார்கள். மைலாப்பூர் எனக்கு அதிகம் பழக்கமில்லாத பகுதி. எப்படியோ வழி கேட்டு வழி மாறி வந்து சேர்ந்தேன். லஸ் தேவாலய சாலையில், மைலாப்பூர் பகுதி நூலகத்தின் மேலே அமைந்திருக்கிறது இந்த அரங்கம். பரபரப்பு அதிகமற்ற ஞாயிறு முற்பகல்.

பிரவின்ஸ்கா, சித்தன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ஏற்கனவே என் வலைப்பூவைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார் என்று சொன்னார் சித்தன். கொஞ்சம் கொஞ்சமாக நிறையத் துவங்கியது அரங்கம். நூற்றிலிருந்து நூற்று இருபது பேர் அமரக்கூடிய அரங்கில் கடைசியில் அறுபது பேர் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

சம்பிரதாயமான வரவேற்புரை, பொன்னாடை போர்த்துதல், நன்றி நவிலல், பரிசு வழங்குதல், என்றெல்லாம் எதுவுமில்லாமல் நேரடியாக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. சித்தன் அவர்கள் முதலில் பேசினார். 'எப்படி யுகமாயினி என்னுடையதில்லையோ, அது போல இந்த இலக்கியக் கூடலும் என்னுடையதில்லை. உங்களுடையது' என்று தொடங்கினார்.

இந்த இலக்கியக் கூடலுக்கான தேவை, அதன் நோக்கம் குறித்து சில வார்த்தைகள் பேசிவிட்டு, இன்று முதல் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் இந்தக் கூடல் நிகழும் என்றும், அதை இளைய தலைமுறையிலிருந்து யாரேனும் ஒருவர் நடத்தித் தருவார் என்றும் அறிவித்தார். இந்த முறை நடத்தித் தந்தவர் நண்பர் பிரவின்ஸ்கா.

முதல் நிகழ்வு, கவிஞர் ரவி சுப்ரமணியத்தின் உரை. 'புதுக்கவிதையும் இசையும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கட்டற்ற காட்டாறாக திசையெங்கும் திரண்டோடும் புதுக்கவிதையை இசையோடு சேர்த்தால் எப்படி இருக்கும் என்ற அவரது பரீட்சார்த்த முயற்சிகள் குறித்துப் பேசினார். இசைஞானி இளையராஜா, இவரது கவிதைகளுக்கும், கவிஞர் கனிமொழியின் கவிதைகளுக்கும் இசை அமைத்த நிகழ்வு தனக்கான தூண்டுகோல் என்றார். ஞானக்கூத்தன், நகுலன், ந.பிச்சமூர்த்தி இவர்களின் கவிதைகளைத் தான் இட்ட மெட்டுகளில் பாடிக் காட்டினார். இந்தப் பரிட்சார்த்த முயற்சி பாராட்டுதற்குரியதே.

தமிழின் இசை என்ற பாகம் கவனிக்கப்படாமலே போய்விட்டது என்ற ஆதங்கம் அவர் பேச்சில் ஒலித்தது. இசைவாணர்கள் தமிழை மறந்து போனதும், தமிழ்க் கவிஞர்கள் இசையைக் கற்றுக்கொள்ளக்கூடாத, தீண்டத்தகாத கலையாக பாவித்ததும் தமிழின் துர்ப்பாக்கியமே என்றார்.

இரண்டாவதாகப் பேசியவர் கவிஞர் வெங்கட் தாயுமானவன். இவரைப் பற்றிய அறிமுக வரிகளே எல்லோரையும் அவர் வசம் இழுத்துச் சென்றுவிட்டன. இவர் கடந்த ஏப்ரல் மாதமே இறந்து விடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஒரு புற்று நோயாளி. திரைத்துறையில் சாதிக்கப் போராடிச் சோர்ந்து போன சமயத்தில், இந்த மாதம் இவர் இயக்குகிற படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. அறிமுக வரிகளால் தன் மேல் ஏற்பட்டிருந்த கழிவிரக்கத்தைத் தன் பேச்சால், தன் கவிதைகளால், தன் கவிதைக் காதலால் துடைத்தெறிந்தார் வெங்கட் தாயுமானவன் என்றே சொல்ல வெண்டும்.

சித்தன் அவர்கள் சொன்ன செய்திகளோடு, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இன்னும் சில செய்திகளை, வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பின் 'ஜீவனின் கவிதை' என்ற தலைப்பிலான தன் பேச்சைத் தொடங்கினார். கவிக்கோ அப்துல் ரஹ்மானின் மாணவர் இவர். அது கூட ஒரு சுவையான செய்திதான். இவர் படித்த காலத்தில் வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம் கிடையாதாம். அதனால், மற்ற வகுப்புகளுக்கு கவிக்கோ அவர்கள் பாடம் நடத்தும்போது அவர்களோடு சேர்ந்து பாடம் கேட்டிருக்கிறார் இவர்.

வாழ்க்கையின் நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் கவிதைகளைத் தேடிப்பிடித்து ரசிக்கிறார். படைப்பை ரசிப்பது எல்லோரும் செய்யும் ஒரு செயல்தான். இவர் படைப்போடு, படைப்பாளியையும் சேர்த்தே ரசிக்கிறார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியைக் கன்னியாகுமரியில் அவர் வீட்டில் சந்தித்த சுவையான அனுபவத்தைப் பற்றிச் சொன்னார்.

கவிதை பற்றிய புரிதலை நோக்கிய இவரது பயணம் வெகு இளம் வயதில் துவங்கி இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், வழிகாட்டிகள், வாசம் வீசிச் சென்ற கவிதைகள் என்று பலவற்றைப்பற்றியும் பேசினார். நல்ல கவிதை எது என்பதைத் தெரிந்துகொண்ட போது தன் வயது 28 என்கிறார்.

இவர் பள்ளி மாணவ்ர்களுக்கான நினைவுப் பயிற்சியை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகிறார். தொடர்ந்து எட்டு மணி நேரம் கூடப் பேசக் கூடியவன், நோயின் தாக்கத்தால் இப்போது தொடர்ந்து பேச முடியாமல் இருக்கிறேன் என்றார்.

இறுதியாகத் தன் மூத்தத் தலைமுறைக்கு ஒரு வேண்டுகோளை வைத்து விடைபெற்றுக்கொண்டார். கவிதையின் நிலை இன்று சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. பதிப்பகங்கள் கவிதைகளை வெளியிட முன் வருவதில்லை. கவிதை இன்னது என்று தெரியாமலேயே இலக்கியம் செய்யத் தொடங்கி விடுகிறது இன்றைய தலைமுறை. 'சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே' என்று ஆட்டோவின் பின் எழுதி இருக்கும் வாசகங்களைக் கவிதை என்று நினைத்திருந்தேன் நான். இன்றும் அப்படிச் சிலர் இருக்கிறார்கள். இதற்கான மாற்று என்ன என்று யோசியுங்கள். இந்தத் தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என்று கோரி அமர்ந்தார் வெங்கட் தாயுமானவன். அவரின் கோரிக்கை நியாயமானதே என்றெனக்குத் தோன்றியது. உண்மை உணர்ந்த மற்றவர்களுக்கும் தோன்றியிருக்கும்.

இலக்கியக் கூடலின் இறுதி நிகழ்வாக அமைந்தது, ஆய்வாளர் சாமிநாதன் அவர்களின் உரை. மா.ராமசாமி அவர்கள் மொழி பெயர்த்திருக்கிற 'அடிமையின் மீட்சி'(Up from the Slavery) என்ற வாழ்க்கை வரலாற்று நூல் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். புக்கர்.டி.வாஷிங்டன் என்ற அமெரிக்கக் கருப்பர் இனப் புரட்சியாளரின் வாழ்க்கையைச் சொல்லும் நூல் இது. மற்ற புரட்சியாளர்கள் போல் போராட்டம் நடத்துவதோ, கலவரம் செய்வதோ இல்லாமல் இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் கருப்பர் இனத்தவரை இன்று அமெரிக்க அதிபர் அளவிற்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது என்றார். இவரது தத்துவங்கள் மிக இலகுவானவை. இவர் கருப்பர் இனத்துக்குச் சொன்னதெல்லாம் இது தான் 'படியுங்கள்; விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தச் சமுதாயத்தில் உங்களுக்கென்று ஒரு தேவையை உருவாக்குங்கள். உங்களால் மட்டுமே அது முடியும் எனும்படியான செயல்களை நிகழ்த்திக் காட்டுங்கள். உங்களுக்கான உரிமை உங்களுக்கு, தானே கிடைக்கும்'

கொஞ்சம் ஆங்கிலம் கலந்த இவரது பேச்சு, ஈர்க்கும் விதமாகவே அமைந்தது. ஆனாலும், தமிழிலக்கியக் கூட்டங்களில் ஆங்கிலப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம் என்றெனக்குத் தோன்றியது.

இவரது உரை முடிந்த பின், விவாத நேரம் தொடங்கியது. ரவி சுப்ரமணியத்தின் கருத்தின் மேல் ஓர் அழகான கேள்வி விழுந்தது. புதுக்கவிதை என்பதே எந்தத் தளைகளும் அற்ற, உணர்வுகளுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கக் கூடிய ஓர் இலக்கிய வகை. அதில் மீண்டும் இசையைக் கொண்டு திணிப்பதால் அதன் அடிப்படையே பாதிக்கப்படுமே என்றொரு கேள்வி. மேலும் கவிஞர் பேசும்போது, ஞானக்கூத்தனின்

'எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்
எல்லா மொழியும் நன்று
கோபிக்காதீர் நண்பரே
அவற்றுள் தமிழும் ஒன்று'

என்ற கவிதையை இசையோடு பாடிக் காட்டினார். அவர் அமைத்த மெட்டு மிக மென்மையான ஒன்றாக அமைந்திருந்தது. 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?' என்ற பாடலை நினைவு படுத்திப் பாருங்கள். அப்படியான ஒரு மெட்டு. இந்த மெட்டு கவிதையின் உணர்வை, அது காட்டுகின்ற எரிச்சல் கலந்த கோபத்தைச் சிதைத்து விடுவதாக ஒரு கருத்து எழுந்தது. கவிஞர் ரவி சுப்ரமணியம் பதில் சொல்கையில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவே செய்தார். இந்தக் கவிதைக்கு ஏற்ற மெட்டல்ல அது; குறைந்த கால அவகாசத்தில் அவசர கதியில் அமைக்கப்பட்ட மெட்டு; அதனால் இந்தக் குறை ஏற்பட்டிருக்கலாம். அதனால் புதுக்கவிதைக்கு இசையே கூடாது என்று சொல்லி விட முடியாது என்ற கருத்தையும் முன் வைத்தார்.

இந்தக் கருத்தை மேலும் வலியுறுத்தினார் தமிழிசைச் சங்கத்தைச் சேர்ந்த தண்டபாணி தேசிகரின் மாணவர் ஒருவர்; அவர் பெயர் அறிவிக்கப்பட்டதாக நினைவில்லை; தன்னை ஒரு சாதாரணமானவன் என்று அறிமுகம் செய்து கொண்டார் அந்த 77 வயது பெரியவர். தண்டபாணி தேசிகரின் பாடல்களைப் பாடிக் காட்டினார். தமிழர்களைத் தமிழில் பாடச் சொல்லிக் கெஞ்ச வேண்டியிருக்கிறது என்று கவலைப் பட்டார். இவர் தமிழிசைச் சங்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்றும், இசை மாத இதழ் ஒன்றை நடத்துகிறார் என்றும், தமிழிசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி வருகிறார் என்றும், பிறப்பால் ஓர் ஈழத்தமிழர் என்றும் பின்னர் அறிமுகம் செய்து வைத்தார் திரு.சித்தன்.

நன்றி என்ற வார்த்தையுடன் எளிமையாக முடிந்தது இலக்கியக்கூடல்.

துளிகள்:

* நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் எனக்கு முகம் தெரிந்த ஒரே ஒருவர் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன். நண்பர்கள் அடையாளம் காட்டிய இன்னொருவர் கவிஞர் வைத்தீஸ்வரன். அவரைப் பார்த்ததும் இதற்கு முன் நான் பதிவிட்ட 'அனுமானங்களின் பொழுதுகள்' கவிதைதான் நினைவுக்கு வந்தது. கவிதைகளில் வேறு முகம் காட்டியிருந்தவர் நேரில் வேறு மாதிரி இருந்தார். எழுத்தாளர் சுஜாதாவின் புகைப்படத்தை முதன் முறை பார்க்கும்போதும் கூட அவர்தான் சுஜாதா என நம்ப மறுத்தேன் நான்.

* இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிலேயே முப்பது வயதுக்குட்பட்டவர்கள், நான், நண்பர்கள் பிரவின்ஸ்கா மற்றும் கோகுல கிருஷ்ணன் மட்டும்தான். அதிலும் மிக இளையவன் நான் தான். மற்ற எல்லோருமே முப்பதின் இறுதிகளைத் தாண்டியவர்கள்.
'தன்னை விடக் கீழே இன்னொருவன் இருக்கிறான் என்ற நினைவுதான் பல மனிதர்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது; அந்தச் சின்ன சந்தோஷம் கூட இன்று எனக்கு இல்லாமல் செய்து விட்டீர்களே' என்றேன் நண்பர்களிடம் (உண்மையில் பிரவின்ஸ்கா என்னை விட இளையவர் என்று நினைத்திருந்தேன்)

* புறப்படும் முன் வெங்கட் தாயுமானவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு வந்தோம். சரித்திர புருஷர்கள் எங்கேயோ பிறப்பதில்லை. இதோ நம்முடனேயே பிறந்து, நாம் விடும் மூச்சுக்காற்றைச் சுவாசித்தபடி நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அனுமானங்களின் பொழுதுகள்

குள்ளமாய்
பெரிதாய் மீசை வைத்து
கண்ணாடி அணிந்து
பேன்ட் மாட்டி
அரைக்கை சட்டையை வெளியே எடுத்து விட்டு
முன்புறம் சற்றே வழுக்கையாய்
சிகரெட் கறைபடிந்த உதடு பெற்று
ஆறு மாதப் பிள்ளைத்தாச்சி போல்
தொப்பை சுமந்து
காதுக்குள் பூனை முடி கொண்டு
கைகள் இரண்டையும் பின்னால் கட்டி
வார்த்தைகளுக்கு வலிக்காமல் பேசி
சத்தமில்லாமல் சிரித்து,
இப்படித்தான்
இருப்பார் என்று
எதிர்பார்த்தேன்
இதுவரை பார்த்திராத
நண்பனின் சித்தப்பா

வேறு மாதிரி இருந்தவரைப்
பார்த்தும்,
பேசாமல் திரும்பிவிட்டேன்

மேய்ச்சல் ஆடுகள்

மேய்ச்சல் முடிந்து திரும்பும்
ஆடுகள் - கடைவாய் உமிழ்நீரில்
பசுங்காடு

Sunday, May 10, 2009

கல்லறை

அதிகாலையில் பார்த்தேன்
என் தெருவில்
புதிதாகப் பிறந்திருந்தது
தார்ச்சாலை

பிரசவித்தவனின்
நேற்றைய தூக்கத்தின் மீது
அழகாகப் போடப்பட்டிருந்தது
அது

கவிதை

இக்கவிதை மணல் வீடு சிற்றிதழின் ஜூலை-ஆகஸ்ட் 2009 பதிப்பில் பிரசுரமானது

எங்கும் விரவிக் கிடக்கிறது
கவிதை

தட்டுப் பட்டு
எடுத்துக் கொண்டவர்கள்
எழுதிக் கொள்கிறோம்
தத்தம் பெயரை,
கவிதையின் கீழே.

இருப்பு

கண்ணாடிகள் அற்ற உலகில்
இல்லாமல் போவேனோ,
என்னால்
பிம்பங்களாக மட்டுமே
உணரப்படுகிற
நான்?

செவிடு

பார்வையாளர் மிகுந்திராத
திரைப்படத்தின்
இரு காட்சிகளுக்கிடையே
நிகழ்த்தப்படும்
மௌனத்தின் அழுத்தம்
தாங்காமல்
வெளிச்சென்று,
புகையிழுத்து
வந்தமரும் அவனுக்கு
எப்போதும் கேட்பதில்லை
மௌனம் எழுப்பும்
இசையின் அதிர்வுகள்

Thursday, May 07, 2009

பழைய இறகு

வெகுநாள் கழித்து
மீண்டும் வாசித்த
புத்தகத்தில்
பத்திரமாய் இருந்தது
பக்க அடையாளமாய் வைத்த
ஒற்றை இறகு

இப்போதெங்கே
இரை தேடிக்கொண்டிருக்கும்
இறகு தந்த பறவை?

Wednesday, May 06, 2009

புலம் பெயர்தல்

இக்கவிதை மணல் வீடு சிற்றிதழின் ஜூலை-ஆகஸ்ட் 2009 பதிப்பில் பிரசுரமானது

வரிசையில் போவதில்லை

அடிக்கடி சண்டையிடுகின்றன

ஒரே இடத்தில்
வாழ்வதில்லை

மழைக்காலம்
அற்றுப் போனதிலிருந்து
சேமிக்கவும்
செய்வதில்லை

தனக்கென்று
தனிக்கூடு செய்வதில்
முனைப்பு கூடியது

இறகு முளைத்த
ஈசல்கள் பார்த்துப்
பொறாமை வேறு

மொத்தமாக
உருமாற்றம்
கொண்டுவிட்டன
நகருக்குள்
புலம் பெயர்ந்த எறும்புகள்

Tuesday, May 05, 2009

வலி

சந்தையெங்கும்
வாசம் பரப்பி
குவிந்து கிடக்கும்
மல்லிகைப் பூக்களுக்குள்
காணாமல் போகிறது
ஒவ்வொரு பூவாகப்
பறித்துச் சேர்த்தவளின்
விரல் வலி

Monday, May 04, 2009

ஒரு கொலை

மலைமுகட்டிலிருந்து
விழுகிறேன் நான்

மீண்டுமொருமுறை
பரிசீலனை
செய்திருக்கலாமோ?

இல்லை.
அறிந்த பின்தான்
அடங்கும்
தீராத தேடல்

அழிதலை
அறிதலும்,
உணர்தலும்
வேண்டுமெனக்கு

மேகங்களின்
பரப்பைக்
கிழித்தபடி
கீழிறங்குகிறேன்

எடையேதுமற்ற
பறவையாக உணர்கிறேன்
ஒரு கணம்

விழுந்த பிறகான
நிகழ்வுகள் பற்றிய
கவலைகள் எதுவுமற்ற
விடுதலையுணர்வு
தேகமெங்கும்
பரவுகிறது

சுகமான
தாளத்தை இசைத்தபடி
தரையில் மோதிச் சிதறுகிறேன்

வாழ்வின் பூரணம்
உணர்ந்துவிட்டதாய்
விம்மிச் சரிகிறது
உடல்

இன்னுமொரு பாதி
நிறையாமலே
சிதைந்துபோனது
வாழ்வின் கோப்பை

Friday, May 01, 2009

வெயில்

அழையா விருந்தாளியாக
வீட்டுக்குள் தினமும்
வந்து போகிறது
வெயில்

மேற்கு பார்த்த வீடு
எனது

காற்று
அடித்து வந்து சேர்த்த
புழுதியில்
பூனையின்
மெல்லிய பாதங்கள்
பொருத்தி
நடந்து வருகிறது

வெயில்,
வெப்பமா?
வெளிச்சமா?
இரண்டும் சேர்ந்ததா?
இருப்பதா?
இல்லாததா?
இல்லாதிருப்பதா?

தர்க்கங்கள் நடத்திப்
பொழுது போக்கும்
என்
ஆறிப்போன மாலைத்
தேநீர்ப்பொழுதையும்,
தேநீரையும்
சூடேற்றிக் கொடுத்துப்
போகிறது

கொஞ்சம் கொஞ்சமாய்
உட்புறம் நீண்டு............
பின்
காணாது போகிறது

இருள்
அடர்ந்து படர்ந்த பின்னும்
வீட்டின்
எல்லாப் பொருட்களின் மீதும்,
சூடு பரப்பிய
தன் பாதச் சுவடுகளால்
நீட்டித்துப் போகிறது
தன் இருப்பை.