புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, December 25, 2011

ஒரு சலூன் கடையும், சில உதிரி முடிகளும்

சவரக்கத்தி
கழுத்தில் அழுந்தும்போது
புலனாகின்றன
வாழ்வின் மீதான பிடிப்பும்
சக மனிதனின் மீதான நம்பிக்கையும்
-----------------------------
அழகான பெண்களும்
அவ்வப்போது வருகிறார்கள்
ஆடைகளை அவிழ்த்துவிட்டு
சுவரோடு ஒட்டிக்கொள்கிறார்கள்
----------------------------
அந்த மூன்றெழுத்து நாயகியின்
அந்தரங்கக் காதலன் பற்றிய
இரண்டாவது குறிப்பில்
இருக்கும்போதுதான்
காலியாக வேண்டுமா
சவர நாற்காலி?
----------------------------
வேறுமாதிரி இருந்தார்கள்
முடிதிருத்தியபின்
நேருக்குநேர் பதித்திருந்த
கண்ணாடிகளின்
உள்ளே உள்ளே
அமர்ந்திருந்த
'நான்'கள்
---------------------------
எப்போதுமே சாதாரணமாக
வந்து விழுகிறது கேள்வியொன்று
மீடியமா? ஷார்ட்டா?
முடிந்த பின் எதுவாகவுமில்லாமல்
என் விருப்பம் போலுமில்லாமல்
அமைகிறது ஏதோ ஒன்றாக
----------------------------
அந்தப் பாடலின் காட்சி
எனக்கு மிகப்பிடிக்கும்
இன்று தான் கவனித்தேன்
அதன் பாடல் வரிகளை
----------------------------
கண்கள் மூடி
ராட்டினமாடிப்
பின் மெல்லக் கலைகிறது
குட்டித் தியானம்

Wednesday, November 02, 2011

இடப்பெயர்ச்சி

இறந்து கொண்டிருக்கிறவனின்
கைகளை
அழுந்தப் பற்றிக்கொள்கிறேன்
கைகளினூடே
ஈருடல்களில்
பாய்ந்து கலக்கின்றன
உயிர்மையும், மரணமும்

பாத்திரம்

எவ்வளவு எடுத்தாலும் குறையாத
அட்சயப் பாத்திரத்துடன்
வந்து சேர்ந்தாள் மணிமேகலை

பிழையில்லை

எவ்வளவு இட்டாலும் நிறையாத
பாத்திரங்கள் நிறையவே இருக்கின்றன
எம்மிடம்

Thursday, September 08, 2011

காலம் தள்ளும்

அடைந்து கிடக்கும்
ஒளியறு வீட்டில்
காலம் அளந்து
காலம் தள்ளும்
யாருங்காணாத கடிகாரம்

ஓடிக்களைத்து
மூச்சடங்கி
ஆவியொடுங்கும்
ஒருநாள்

விரல்கள் பிரித்து, தள்ளி,
விரைந்தோடும் காலம்
இன்னும் இன்னும்

Thursday, July 28, 2011

கவிமூலம்

நினைவடுக்குகளிலிருந்து
காணாமல் போனதொரு கவிதை

எதனிடமிருந்தோ
திருடியதுதான்

அரைத்தூக்கத்தில் வாசித்த
இன்னொருவனின் கவிதை,
மெல்ல மெல்லத் திறக்கும்
கதவின் பேரிரைச்சல் ,
குருட்டுப் பாடகனின்
முதல் நிமிட அபஸ்வரம்,
விபத்தில் நசுங்கியவனின்
கடைசி இழுப்பு

ஏதோ ஒன்றுதான்
மூலமாய் இருந்தது

மீண்டும் கிடைக்கக்கூடும் அதே கவிதை!

வாசிக்காமலா இருக்கப் போகிறேன்
இன்னொருவனின் கவிதையை?
திறக்காமலா இருக்கப்போகிறது
இன்னொரு கதவு?
பாடாமலா இருக்கப் போகிறான்
இன்னொரு குருட்டுப்பாடகன்?
நசுங்காமலா இருக்கப்போகிறான்
இன்னொரு விபத்தில்
இன்னுமொருவன்?

Monday, June 27, 2011

காலை

யாரும் உறங்கக்கூடும்
யாரும் விழித்திருக்கக் கூடும்
நான் நடந்து போகிறேன்

ஒரு வழிப்பாதையை
இருவழியாக்கிக் கடந்து போகும்
மாநகரப் பேருந்தை
முட்டுக் கொடுத்துத் தூக்கி
யுடைந்த காலுடன் விழுகிறது
சாலை நாய்

பதைத்துப் போய்க்
கூர்ந்து பார்த்து
நின்று நகர்கிறது
என்னைப் போல்
காலை வெயிலும்

Tuesday, May 31, 2011

கன்னல் தமிழ்

இருத்தலின் இன்னொரு பரிமாணத்துக்கு வாழ்க்கை நகர்த்தியிருக்கிறது. இதுவரை இல்லாத மகிழ்ச்சியையும் கூடவே பயத்தையும் உணர முடிகிறது தந்தையாய் இருத்தலில். ஒரு மாதமாகிவிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல இந்த உலகத்துடன் பழகத் தொடங்கியிருக்கிற ஒரு புது உயிருடன் நானும் பழகத் தொடங்கியிருக்கிறேன். உருவங்கள் கூட புலப்படாத கண்களுக்கு அப்பா பாரு அப்பா பாரு என்று என்னை அறிமுகப் படுத்தி வைக்கிறார் மனைவி. யாருக்கும் புரியாத சத்தமும், அமைதியும், தூக்கமும், சிரிப்பும், அழுகையுமாக வாழ்கிறாள் எங்கள் பிஞ்சு தேவதை.

எஸ்ராவின் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' சிறுகதையில் ஒருவன், தான் அப்பா ஆனதும், கண்ணில் படும் ஆண்களை இரண்டே வகையில் பிரித்துவிடும் சிந்தனையிலிருப்பான். அப்பா ஆனவர்கள், அப்பா ஆகப்போகிறவர்கள். அவன் பார்வையே அப்பாக்களின் உலகத்தைச் சார்ந்ததாக மாறிவிடும். நானும் அது போலான சிந்தனையில் சில பொழுதுகளில் வாழ்கிறேன். இந்த அனுபவமும் சுகமாகவே இருக்கிறது. இன்னும் பல அனுபவங்களைத் தரக் காத்திருக்கும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கை நீள்கிறது.

இப்போது பெயரற்ற தேவதைக்கு பெயரும் வைத்தாயிற்று. ஆணுக்கொன்று, பெண்ணுக்கொன்றாக முன்பே பெயர் தெரிவு செய்து வைத்திருந்தோம். இடையில் நியூமராலஜி, நேமாலஜி என்று ஏதேதோ லஜிகள், ராசி எழுத்து போன்ற தடைகளை மீறி விரும்பிய பெயரையே சூட்டியதும் பெரிய சாதனையாகப்படுகிறது.

அர்த்தம் புரியாத பிற மொழிப் பெயர்களை நாகரிகமாக வைத்துப் பெருமைப்படும் மக்கள், நாங்கள் சூட்டியிருக்கும் தமிழ்ப்பெயர் வாயில் நுழையவில்லை என வருத்தப்படுகிறார்கள். எனக்குப் பெயர் சூட்டிய என் அப்பாவின் நிலைமை இப்போது புரிகிறது. எழுத்தாளர் பாமரன் ஒரு முறை 'அண்ணா சாலையில் நின்று சுரேஷ் என்று சத்தமிட்டால் தொண்ணூறாயிரம் சுரேஷ்கள் திரும்பிப் பார்ப்பார்கள்' என்று சொன்னார். அதுவும் ஒருவகையில் உண்மைதான். தமிழில் பெயர் வைப்பது என்பது மட்டுமல்லாமல், அதிகம் அறியப்படாத பெயராகவும் இருக்க வேண்டும் என்று கருதினோம். 'கன்னல் தமிழ்' அப்படித்தான் இருக்குமென நம்புகிறோம்.

Wednesday, May 18, 2011

இழவு வீடு

ரசம்போன
பழைய நிலைக்கண்ணாடியின்
தெளிவற்ற பிம்பமெனச்
சமைந்திருக்கிறது
இழவு வீடு

அதிக துக்கத்திலோ
சிரித்துவிடக் கூடுமெனும் பயத்திலோ
பாதிமுகம் புதைத்திருக்கும்
சிலரின் கண்கள் வெறித்திருக்கின்றன
ஈக்கள் ஆடும் கண்ணாமூச்சியை

திரும்புவதற்குள்
அழுதுவிடவேண்டுமென
அதிகப் பிரயத்தனப்படும்
யாரேனுமொருவனிருக்கிறான்
இந்த வீட்டிலும்

வெய்யில் தின்றது போக
மீதப் பிற்பகலை
வாய் பிளந்து
தின்று தீர்க்கிறார்கள் சிலர்

மவுத் ஆர்கன்
வாசிக்கத் தொடங்குகிறான்
அழுது முடித்திருந்த ஒரு சிறுவன்
புன்னகைத்தபடி

சாவுடன் சேராததொரு இசை
சாவை நசித்தபடி
உற்சாகமாக நிறைக்கிறது
காற்றின் அடுக்குகளை

Saturday, March 26, 2011

டவ்

'டவ் பாரு டவ்'
என்றாள் அம்மா

விரலிடுக்கில்
காற்றைப் பிடித்திழுத்து
புறாவே வந்ததெனச்
சிரித்துச் சொல்கிறது
குழந்தை
'டவ்'

காற்றை லேசாக
அதிர்வூட்டி
நானும் சொல்லிப் பார்த்தேன்
'டவ்'

எனக்குமாகச் சேர்த்தோர்
இறகைப் பரிசளித்துப் போனது
மூவரையும் ரசித்திருந்த
டவ்

பெய்யலானது

உலகின்
மிகச்சிறந்த
முத்தத்தை இடுவதென நாம்
முடிவு செய்திருந்த தினத்தில்
பெய்யலானது மழை

மழையைக் காதலும்
காதலை மழையும்
நனைக்குமழகை
ரசித்திருந்த பொழுதில்
அவசரமாக ஜனித்துத் தொலைத்தது
நம் முத்தம்

இட்டேனா
பெற்றேனா
என்பதறியாது நிகழ்ந்துவிட்ட
முத்தத்தை
உன்னுதடுகள் எப்படி
உணர்ந்திருக்கும்
என்ற ஞானமற்று
உலரத் தொடங்குகின்றன
என்னுதடுகள்,
கோடை மழையின்
ஒரு துளி மட்டும் பருகிய
வண்டலென

சிநேகிதம்

நாள் கடந்து பார்த்த
பழைய சினேகிதியிடம்
வாஞ்சையாய்க்
கை தடவிப் பேசி
மிக இயல்பாகப் பூவைக் கைமாற்றி
தலையில் சூடச் செய்யும்
பூக்காரம்மாளிடம்
எப்படிப் பேரம் பேச முடியும் சொல்

வழியனுப்புதல்

வழியனுப்புதலின்
வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு நிலைகளில்
வாழ்வு

பேருந்து நிலையங்களில்

இரயில் நிலையங்களில்

சிறுபொழுது வசித்த
வாழ்விடங்களின் வாசல்களில்

சிலமுறைகள் விமான நிலையங்களிலும்

நகர்ந்தபின் உணவுண்ணும் நினைப்பில்

கழிவகற்றும் முனைப்பை அடக்கிக்கொண்ட
சிரிப்போடான பேச்சில்

தூக்கம் தொலைந்த துக்கத்தில்

திரும்பிச் செல்லும் பயணம் குறித்த கவலையில்

எந்தச் சிந்தனையுமற்று
முன்னிலை மற்றும் படர்க்கையில் மட்டும்
இதுவரை
இழவு வீடுகளில்

பகற்கலவி

இரவு பணிக்காரனின்
பகற்கலவி
குவிந்திருக்கிறது
எந்நேரமும் தட்டப்படக்கூடும்
வாயிற்கதவின் மீது

Thursday, February 10, 2011

வெய்யிலும் ஈரமாகும்

துவைத்த ஆடைகள்
சேர்ந்து குறைக்கும்
வெய்யில் நேரக் கொடியின் தனிமையை

நொடிகளில் உலரத் தொடங்கும்
நீர் சேர்ந்து பிரியும் ஆடைகள்

ஈரமாகும் கொஞ்சமாக
வெய்யிலும்

Saturday, January 08, 2011

மு.ஹரிகிருஷ்ணன் - புத்தக வெளியீடு

மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு இது.

நாள்:12-1-2011
நேரம்: புதன் மாலை 5.00மணி
இடம்:டிஸ்கவரி புக் பேலஸ்.
முனுசாமி சாலை. கே.கே. நகர்.
சென்னை.78.

தலைமை.
முனைவர்.கே.ஏ. குணசேகரன்

முன்னிலை:
பிரளயன்

வரவேற்புரை:
கறுத்தடையான்

நூல் : அருங்கூத்து(பதிப்பு : மணல்வீடு)

வெளியிடுபவர்:
அ.மார்க்ஸ்

முதல் பிரதி பெறுவோர்:
அசுவகோஷ்
வீர சந்தானம்
கிருஷாங்கினி
தமிழ்நதி

மதிப்புரை:
வெளி.ரங்கராஜன்
கரிகாலன்
விகாரன்

நூல் : நாயிவாயிச்சீல (பதிப்பு : பாரதி புத்தகாலயம்)

வெளியிடுபவர்:
இமயம்

முதல்பிரதி பெறுவோர்:
ப்ரியா பாபு
நீலகண்டன்
கோசின்ரா
ஆதிரன்

மதிப்புரை:
கீரனூர் ஜாகிர்ராஜா

சிறப்புரை:
அ.மார்க்ஸ்
நிறைவுரை:
பி.லெனின்

நிகழ்ச்சித்தொகுப்பு:
வெய்யில் முத்து

நன்றியுரை:
தவசிக்கருப்புசாமி(மு.ஹரிகிருஷ்ணன்)

நிகழ்வு ஏற்பாடு:
ர.தனபால்.

புத்தகக் காட்சி

ஐந்தாம் நாளில் புத்தகக்காட்சிக்குச் செல்ல முடிந்தது. இம்முறை கிராமியப் பண்பாடு, சடங்குகள், பழக்க வழக்கங்கள், பழங்குடி இனத்தவர் பற்றிய பதிவுகளைச் செய்யும் நூல்களை வாங்குவதாகத் திட்டமிட்டிருந்தேன். அதிலும் புனைவல்லாதனவாக வாசிக்க ஆர்வமாக இருந்தது. அவ்வகையிலான நூல்களை இனங்காணுவது கொஞ்சம் சிரமமாகவிருந்தது. இணையத்தில் தேடியும், நண்பர்களின் உதவியுடனும் சில புத்தகங்களைக் கண்டுகொண்டேன். மற்ற புத்தகங்களைப் புத்தகக்காட்சியில் தேடிக்கொள்ளலாம் என்ற முடிவுடன் சென்றேன். முடிவின் விளைவை வெகுவாகவே அனுபவிக்க நேர்ந்தது. நிறைய தேடியலைந்தும் தயார் செய்திருந்த பட்டியலைத் தாண்டி சில புத்தகங்களையே காண முடிந்தது. குறிப்பிட்ட சில பதிப்பகங்களில் மட்டுமே நான் தேடிச்சென்ற வகையிலான புத்தகங்கள் கிடைத்தன.

பொதுவாகவே இம்முறை பதிப்பகங்கள் வறட்சியடைந்திருப்பதாகப்பட்டது. புத்தகக் காட்சியில் புத்தகமல்லாத பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் சென்ற ஆண்டைவிட இம்முறை அதிகரித்திருக்கின்றன. தமிழைத் தவிர்த்த பிற மொழிப் புத்தகங்கள் அதிகமாக இல்லை. போகிற போக்கில் காதில் விழுந்த வரிகள் இரு பதின்பருவ இளைஞர்களிடமிருந்து வந்ன , 'ஏன் ஒரே தமில் புக்ஸா இருக்கு?' 'சென்னை புக் ஃபேர் இல்ல. அதான்.....'. கேட்டதும் சிரித்துக்கொள்ளத் தோன்றியது.

குறித்து வைத்திருந்த பதிப்பகங்களில் சில புத்தகங்களை வாங்கினேன். காலச்சுவடு பதிப்பகத்தில் 750 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் ஒரு வருட காலச்சுவடு இதழ் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்றார்கள்; வாங்கினேன். வம்சி பதிப்பகத்தில் மட்டும் விற்பனையில் இருக்கும் இளைஞர் எந்த மாதிரியான புத்தகங்கள் வாங்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டு சில புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்தையும் தந்தார். அவர் சொன்னதற்காகவே ஒரு புத்தகத்தை வாங்கினேன். இந்த அணுகுமுறை வேறெந்தப் பதிப்பகத்திலும் இருக்கவில்லை.

சந்தியா, காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு இவற்றில் கேட்ட புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தார்கள். அதைத் தாண்டிய அறிமுகங்களைச் செய்யவேண்டிய கட்டாயம் அவர்களுக்கில்லாதிருப்பதும் உண்மையே.

விற்பனை நிலையங்களுக்கு இடையேயான பாதைகளுக்கு வள்ளுவர் பாதை, பாரதி பாதை, ஷெல்லி பாதை என்பன போன்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள். இது சென்ற ஆண்டு இருந்ததாக நினைவில்லை. பாதைகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெறும் பெயர்களாக இருந்தாலும் அழகும், பயனும் கூட்டுவனாக இருக்கின்றன இந்தப் பெயர்கள்.

ஏற்கனவே வாசிக்காமல் மீதமிருக்கும் புத்தகங்கள் நிறைய. ஆனாலும் என்றாவது வாசித்து விட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் வாசிக்கப்படுவதற்கான தருணம் தானாகவே நிகழ்கிறது. வாங்கி இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்த பின் திடீரென ஓரிரு தினங்களில் வாசித்து முடித்த புத்தகங்களும் என்னிடம் உண்டு. அந்த நம்பிக்கை தந்த தைரியத்தில் இவ்வருடமும் வாங்கிச் சேர்த்த புத்தகங்கள் கீழே.

உயிர்மை பதிப்பகம்
கிராமத்து தெருக்களின் வழியே - ந.முருகேச பாண்டியன்
தமிழ் மண்ணின் சாமிகள் - மணா
மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - கழனியூரன்
401 காதல் கவிதைகள் - சுஜாதா(நண்பருக்காக)

கிழக்கு பதிப்பகம்
உணவின் வரலாறு - பா.ராகவன்
இருளர்கள் ஓர் அறிமுகம் - க.குணசேகரன்
சுகப்பிரசவம் - டாக்டர் மகேஸ்வரி ரவி(மனைவிக்காக)

காலச்சுவடு பதிப்பகம்
ஒரு நகரமும் ஒரு கிராமமும் - எஸ்.நீலகண்டன்
உப்பிட்டவரை - ஆ.சிவசுப்பிரமணியன்
ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்
என்னைத் தீண்டிய கடல் - வறீதையா கான்ஸ்தந்தின்
பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்
மூதாதையரைத் தேடி - சு.கி.ஜெயகரன்
அரபிக்கடலோரம் - சக்கரியா (தமிழில் : சுகுமாரன்)
கானுறை வேங்கை - கே.உல்லாஸ் கரந்த்(தமிழில் : தியடோர் பாஸ்கரன்)
அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன்

வம்சி பதிப்பகம்
சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு(தமிழில் : கே.வி.ஷைலஜா)
கிளிஞ்சல்கள் பறக்கின்றன - வலைப்பதிவர்களின் கவிதைகள் (தொகுப்பு : ஜே.மாதவராஜ்)
வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ரமாதித்யன்(நண்பருக்காக)
பாலு மகேந்திராவின் 'கதை நேரம்' குறுந்தகடுகள்

சந்தியா பதிப்பகம்
கிராமங்கள் பேசுகின்றன - கார்முகில்
வட்டமிடும் கழுகு - ச.முகமது அலி

க்ரியா பதிப்பகம்
கடவு - திலீப்குமார்

தான் பதிப்பகம்
சாப்பாட்டுப் புராணம் - சமஸ்

அகரம் பதிப்பகம்
பண்பாட்டு பொருண்மைகள் - மா.சுந்தர பாண்டியன்

தாகம் பதிப்பகம்
சித்திரப்பாவை - அகிலன் (நண்பருக்காக)

ஸ்ரீ விஜயம் பதிப்பகம்
சேகர் சைக்கிள் ஷாப் - விக்ரமாதித்யன்(நண்பருக்காக)

அதிகமாக படைப்பிலக்கியங்கள் வாங்கவில்லை என்பது பட்டியலிட்டபின் புலனானது. இப்போதைய விருப்பம் படைப்பிலக்கியமாக இல்லாதிருப்பதால் இப்படி. அடுத்த புத்தகக்காட்சிக்கு முன் இவற்றில் எத்தனைப் புத்தகங்களை வாசிக்க முடிகிறது என்பதைப் பார்ப்போம்.

Friday, January 07, 2011

புத்தகக் கண்காட்சி

கிராமியப் பண்பாடு, வாழ்க்கை முறை, சடங்குகள், வெவ்வேறு ஊர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பழங்குடி இனத்தவரின் வாழ்க்கை இவற்றைப் பதிவு செய்யும் புத்தகங்களை இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் வாங்குவதாய் உத்தேசம். நானே முயன்றும், நண்பர்களின் உதவியுடனும் சில புத்தகங்களை அடையாளம் கண்டிருக்கிறேன். இந்த வகையைச் சேர்ந்த புத்தகங்கள் உங்களுக்குத் தெரிந்தால் தெரிவித்து உதவவும். புனைவல்லாத புத்தகங்களாக இருத்தல் மிக விருப்பம். நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்